Monday 29 September, 2008

மன்னிப்பு கேட்கும் மத பீடங்கள்




19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், பூமியில் உள்ள உயிரனங்களின் தோற்றம் குறித்து, ஐரோப்பாவில் நிலவி வந்த கருத்தென்னவோ விவிலியத்தில் கூறியது போல “இறைவனே ஏழு நாட்களில் உலகத்திலுள்ள அனைத்து உயிரனங்களையும் படைத்தார். ஏழாவது நாளில், மனிதர்களை, அதாவது ஆதாமையும், ஏவாளையும் படைத்தார். அவர்கள் ஈடன் தோட்டத்தில், சாத்தானோட தூண்டுதலால், அறிவுக்கனியை (Fruit of Knowledge) உண்டு உணர்வு பெற்றதன் விளைவே மனித இனம்" என்பன போன்றவையே. அது சரி, அறிவை தரக்கூடிய கனியை உண்ணக் கூடாது என்று ஏன் கடவுள் கூறினார்? அன்றிலிருந்து இன்றுவரை மனிதனை முட்டாளாக வைத்திருப்பதுதான் கடவுளின் வேலை போலிருக்கிறது. இது மாதிரி மதத்திற்கு மதம், அவர்களது கடவுள்தான், அனைத்து உயிரினங்களையும் படைத்தது என்கிறது. இந்து மதம், ஒரு படி மேலே போய், மனிதனுடன் சேர்த்து சாதியையும் படைத்தது.

இந்த சூழலில்தான், 1831ஆம் ஆண்டில் 22 வயது இளைஞனான சார்லஸ் ராபட் டார்வின், ஹச்.எம்.எஸ் பிகல் (HMS Beagle) என்னும் கப்பலில் தனது உலகச்சுற்று பயணத்தை தொடங்கினார். ஐந்து ஆண்டு சுற்றுப்பயணத்தில் உலகத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான உயிரனங்களைப் பற்றியும், அவற்றின் வாழ்நிலை மற்றும் சூழ்நிலையையும் தெரிந்து கொண்டு 1836ல் இங்கிலாந்திற்கு திரும்பினார். பயணத்தின் போது வழிநெடுக, தான் எடுத்த குறிப்புகள் மற்றும் சேகரித்த தாவர, விலங்குகளின் மாதிரிகளின் மீது, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி செய்தார். அதன் விளைவாக, பரிணாம வளர்ச்சி தத்துவத்தை, ஆர்ஜின் ஆப் ஸிபிஸ் (Origin of Species) என்ற புத்தகத்தின் மூலம் 1859ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த புத்தகம் ஐரோப்பாவில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.

உலகத்தில் முதன் முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம்தான், பின்பு இரு செல் உயிரி, அதன் தொடர்ச்சியாக நீரில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை என்று கோடிக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியின் விளைவே பல்வேறு உயிரினங்கள் என்பதே இந்த புத்தகத்தின் சாராம்சம். எந்த ஒரு உயிரினம், தன் புறச்சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறதோ (Theory of Natural selection & survival of fittest), அது மட்டுமே தப்பி பிழைக்கும் என்றார். அதோடு, மனிதனும் (Homo sapiens) விலங்கினதை சேர்ந்தவன்தான், அவனுடைய முன்னோர்கள் குரங்குகள் என்றும் கூறினார். மனிதனை இறைவனே படைத்தான், அவனுரும் அல்லல்களுக்கு ஆதாம் ஏவாள் செய்த பாவமே காரணம் என்று மத பீடங்கள் போதித்த கருத்தை தகர்த்தது டார்வின் தத்துவம். இதனால் ஆத்திரம் அடைந்த கிறுத்துவ மத பீடம், பரிணாம வளர்ச்சி தத்துவத்தை தவறு என்றது. பள்ளிகளில், விவிலியத்தில் கூறியுள்ள உருவாக்குதல் தத்துவத்தையே (Creationism theory) போதிக்குமாறு வலியுறுத்தியது. உழைக்கும் மக்கள் தனது வறுமைக்கு காரணமாக விதியையும், முன்னோர்கள் செய்த பாவம் அல்லது தான் முற்பிறவியில் செய்த பாவம் என்று நம்புவதையே ஆளும்வர்க்கம் விரும்பியது. ஏனென்றால் இது, ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களை மறைப்பதற்க்கும், உழைக்கும் வர்க்கம் ஒடுக்குமுறையை எதிர்த்து கிழர்ந்தெழுவதை தடுப்பதற்கும் உதவியது. மதம் இதை கச்சிதமாக பாது்காத்து வந்தது.

சமூகத்தில் முரண்பாடுகள் இடையறாது மோதிக்கொண்டே இருக்கும், அதன் விளைவாக மாற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படுகிறது என்ற வரலாற்று பொருள் முதல்வாதத்தை உருவாக்கிய மார்க்ஸ், டார்வின் தத்துவத்தை பார்த்து புலகாங்கிதம் அடைந்ததில் ஆச்சரியம் ஒன்றுமிலை. தனது, மூலதனத்தின் இரண்டாம் பதிப்பை அவருக்கு அனுப்பி வைத்தார்.

டார்வின் அமீபாவில் இருந்துதான் மனிதன் வந்தான் என்று சொன்னதுமே, சர்ச்சு அறிவுஜீவிகள் அந்த அமீபாவை படைச்சது யாருனு? கேட்டாங்க. அவர்கள் வாதமெல்லாம், ஒரு பொருளோ அல்லது உயிரினமோ இருக்கிறது என்றால் கண்டிப்பாக அது ஒருவரால் படைக்க பெற்றிருக்க வேண்டும் என்பதே. அப்ப கடவுள் இருக்கிறார்னு சொல்ற இவங்க, அத படைச்சது யாருனு? கேட்டா, "அவர் சுயம்பு, அதாவது தானாகவே தோன்றினார்"ங்றாங்க. அவரால் முடியும்னா, ஏன் இந்த அமீபா தானாக தோன்ற முடியாது.

காலப்போக்கில் டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துமானது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மையாகிவிட்ட நிலையில், இன்று அனைத்து பள்ளிகளிலும் (கிறுத்துவ மத பள்ளிகள் உட்பட) அறிவியல் வகுப்பில் போதிக்கப்படுகிறது. ஆனால் இன்னொருபுறம், மத வகுப்புக்களில் இறைவனே மனிதர்களை படைத்தான் என்பதும் தொடர்கிறது.


கடந்த செப் 14 2008, பரிணாம வளர்ச்சி தத்துவம் வெளியாகி 149 ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்திலுள்ள கிறுத்துவ மத தலைமையகம் (Church of England) டார்வினிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த அமைப்பின், தலைமை மக்கள் தொடர்பாளர் ரெவ். டாக்டர் மால்கம் பிரவுன் வெளியிட்டுள்ள அறிகையில், “டார்வினின் தத்துவத்தை கண்மூடித்தனமாக எதிர்ததற்காகவும், பிறரையும் அவ்வாறு செய்ய தூண்டியதற்காகவும் நாங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம். கிறுத்துவ மதப்பீடங்கள், வானவியல் அறிஞர் கலீலியோவிற்கு இழைத்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. டார்வினின் பிறந்து இருநூற்றாண்டு நிறைவடையும் இவ்வேளையிலே, மத பீடம் அவருடைய தத்துவத்தை புரிந்துக்கொள்ளாதற்கு மன்னிப்பு கேட்கிறது”.
எந்த ஒரு உயிரினம், தன் புறசூழ்நிலைக்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறதோ (Theory of Natural selection & survival of fittest), அது மட்டுமே தப்பி பிழைக்கும் என்ற டார்வினின் தத்துவம், பாவமன்னிப்பு கேட்கும் இந்த மதப்பீடங்களுக்கும் பொருந்தும். அடிப்படைவாத கிறுத்துவ அமைப்புகளிடமிருந்து விலகி, தன்னை ஒரு நவீன அறிவியல் சார்ந்த மதமாக காட்டிக்கொண்டால் மட்டுமே தப்பி பிழைக்க முடியுமென்பதே இதற்கு காரணம்.

உலக மக்கள் அனைவரின் குடியுரிமைக்காக போராடிய, ஆனால் எந்த நாட்டிலும் குடியுரிமை வழங்காமல் விரட்ட பட்ட , இன்னோர் மாமேதையிடம் இந்த உலகமே மன்னிப்பு கேட்கும் நாள் வெகு விரைவில் வரும்.

வானவியல் அறிஞர் கலீலியோவிற்கு, மத பீடங்கள் இழைத்த கொடுமைகளை பற்றி அடுத்த இடுகையில் பார்போம்.

(மேலே உள்ளது டார்வினின் புகைப்படம்)

Sunday 21 September, 2008

எனது நண்பன்

இதை எழுதுவதற்கு என் நண்பன் ஒருவனே காரணம். அவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான்.

எனது பழைய கல்லூரி நண்பர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து, கிராமப்புற மாணவர்களுக்கு உதவுதற்குக்கான அமைப்பு ஒன்றை உருவாக்கலாம் என்று முடிவு செய்தனர். அந்த அமைப்பில் யார் யார் பங்கு பெறலாம், அமைப்புக்கு என்ன பெயரிடலாம் என்ற விவாதத்தில் அவன் கூறிய கருத்துக்கள், மெத்த படித்த மத்தியதர வர்க்க மற்றும் கணிணி துறையில் பணிபுரிவோரின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக எனக்கு தோன்றுகிறது.

அவன் சொல்றான், “டேய் அரசியல்ல இருக்கிறவன இதுல சேக்காதிங்க, பேர்ல புரட்சி, கிரட்சின்லாம் வக்கியதிங்க”ன்னு. நான் குறுக்கிட்டதற்கு, “Boss கம்யூனிசமெல்லாம் வெளிநாட்டு சரக்கு, இங்கலாம் வேலைக்கு ஆகாது. அந்த கொள்கைகல்லாம் உடல் உழைப்பு இருந்த காலத்துல எழுதுனது, இன்னைக்கு எல்லாமே automatic ஆயிருச்சு, computer வந்துருச்சு, இதெல்லாம் பொருந்தாது” ங்றான்!!

இவர்களை பொருத்தவரை, தேர்தல் ஒன்று மட்டுமே அரசியல் என்று நினைக்கிறார்கள். அதற்கு அப்பால் ஒவ்வொரு செயலுக்குப்பின் மறைந்திருக்கும் வர்ணாசிரம, வர்க்க அரசியலை பார்ப்பதில்லை. இதை முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மிக கவனத்துடன் பாதுகாத்து வருகின்றன.

அரசியல் = அரசு + இயல்.
அதாவது அரசு இயங்கும் முறை.

அரசியல்வாதி = அரசு + இயல் + வாதி.
அதாவது அரசு இயங்கும் முறையை பற்றி வாதிடுபவன்.

மண்ணெண்னை விலை ஏறிப்போச்சுணு பொலம்புற இட்லி சுடற கிழவியும் அரசியல்வாதிதான். ஏன்னா அரசு இயங்ற முறை பற்றி விமர்சனம் பண்ணுதே!. அப்ப நீயும் நானும் அரசியல்வாதிதான். ஆனா இதை பத்தி சிந்திக்காம, அரசியில் பேசுறதற்கேனு ஒரு தனி கூட்டத்தை ஒதுக்கனது தான் பெறும் தவறு.


பெருவாரியான மக்கள் தங்களை அரசியல் சார்பற்ற நடுநிலையாலர்கள் என்று அறிவித்து கொண்டாலும், சமயம் வரும்போது தனது சாதி மற்றும் மத அரசியலலில் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும், அதென்ன “அடிக்கிறவன் பக்கமும் நிற்க மாட்டேன், அடி வாங்கிறவன் பக்கமும் நிக்க மாட்டேன்” என்பது நடுநிலையா? அல்லது அடிக்கிறவனுக்கு மறைமுக ஆதரவா?


புரட்சிக்குறித்த அவனோட கருத்துல நானும் உடன்படுகிறேன். அம்பானியோட ரிலையன்ஸ் தொலைத்தொடர்ப்பு புரட்சியையும், புரட்சி கலைஞர் நடிகர் விஜயகாந்தையும் பார்த்து புரட்சிக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட, இந்த IT புரட்சியாளர்களிடம் வேற என்ன பேச முடியும்?

கம்யூனிசம் மார்க்ஸ்க்கு உதித்த ஞானோதயம் அல்ல. மார்க்ஸின் கடுமையான ஆராய்ச்சிக்குப் பின் உருவான சமூக விஞ்ஞானம். நியூட்டன், எய்ன்ஸ்டின், டார்வின், கலிலியோ போன்றோர் அறிவியலில் ஆராய்ச்சி செய்தது போல மார்க்ஸ் சமூக அறிவியலில் ஆராய்ச்சி செய்தார்.

இறக்குமதி சரக்கான நியூட்டன் விதிகளை பயன்படுத்தி இந்திய மண்ணில் ராக்கெட் விட முடியுமென்றால், எய்ன்ஸ்டின் விதிகளை பயன்ப்படுத்தி இந்திய மண்ணை, அணு குண்டு சோதனையால் கிழிக்க முடியுமென்றால், இந்திய மண்ணில் நிலவும் சமூக ஏற்ற தாழ்வை கம்யூனிசம் தகர்த்தே தீரும்.


இந்த மத்தியத்தர வர்க்கம், என்றும் தான் மட்டுமே உலகம் என்று நினைக்கும். அவனுக்கு பிரச்சனை என்றால் எல்லோரும் போராட வேண்டும். இவன் ஏ.சி ரூம்ல இருந்து “எல்லோரும் உடல் உழைப்பை கைவிட்டுட்டாங்க”றான். இன்னைக்கு அவனுக்கு சோறு போடற விவாசயத்திலதான் 70% மக்கள் இருக்கிறார்கள். இவந்தான் Pizza சாப்பிடறாவானச்சே மறந்துட்டேன். இவன் சொந்தகாரன் இன்னும் வயல் உழுதுக்கிட்டுதான் இருக்கான். ம்ம்ம்ம்ம்.......

முதல்ல இவன நம்ம கலப்பையால உழுகனும் ஏன்னா இவன் இன்னும் பண்படாத மண்.