Monday 13 October, 2008

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு......


Brides wanted:
Iyengar boy, Tenkalai, Bharadwaj, poorattathi
29, 180cm, well built, handsome SWE only son
family well settled in US seeks fair, slim, good
looking, god fearing prof. Qualified girl from
same sect. Age around 25, send BHP.

இது வேற ஒன்னுமில்லங்க, “தி இந்து” நாளிதழில், மணமகள் தேவை பகுதியில் இந்த வாரம் வெளியான ஒரு விளம்பரம்தான். ஏண்டா, பொண்ணு பாக்றீங்களா? இல்ல மில்ட்ரி செலக்சனா? எனக்கு ஒன்னும் புரியல. வெளியான அனைத்து விளம்பரங்களிலும் ஜாதி பெயர்கள் மாறுகிறேதே தவிர, சாரம்சங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, “எல்லா பயலுக்கும் வெள்ளத் தோல் (fair) பிள்ள தான் வேணுமாம்”. அதேபோல் மணமகன் தேவை பகுதியில் அனைத்து பெண்களும் மாநிறம் (wheatish) அல்லது சிகப்பு நிறம் (fair complexion) என்றே பெற்றோர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இல்லாவிட்டால் திருமணச்சந்தையில் விற்க முடியாதே! அதே சமயம் இந்த விளம்பரங்கள், தங்களுக்கு சிவப்பான மணமகன்தான் தேவை என்று வலியுறுத்துவதில்லை.


"வெள்ளத்தோல்" தான் அழகு, உயர்ந்தது என்ற கருத்தை உருவாக்கியது யார்? “பொம்பளை என்றால் சிகப்பாக, அழகாக இருக்க வேண்டும், ஆம்பளை எப்படிவேணா இருக்கலாம்” என்ற கருத்து சமூகத்தில் நிலவ காரணமென்ன? முதலில் எது அழகு? இது பார்பவர்களின் மனநிலையைப் பொருத்தது. “பதேர் பாஞ்சாலியை” எடுத்த சத்தியஜித் ரேவுக்கு, பொக்கை வாய்கிழவியின் சிரிப்பும் அழகாக இருக்கிறது, நம்ம ஊர் குப்பை இயக்குனர் பேரரசுக்கு, நமிதாவின் இடுப்பு மட்டும்தான் அழகு.


மனித உடலின் நிறத்தை, வெளிப்புறத் தோலுக்கு (Epidermis) அடியில் சுரக்கும் மெலனின் (Melanin) என்னும் சுரப்பியே நிர்ணயிக்கிறது. அதிகமாக மெலனின் சுரப்பதே கருப்பான நிறத்திற்கும், குறைவான மெலனின் சுரப்பதே சிகப்பான நிறத்துக்கும் காரணம். இந்த சுரப்பியானது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடற்செல்களை தாக்குவதை தடுத்து, தோல் புற்றுநோய் வராமல் காக்கிறது. அதனால் தான், இயற்கையாவே சூரிய ஓளி செங்குத்தாக விழும் நிலப்பரப்பில் வாழ்பவர்களின் நிறம் கருப்பாக இருக்கிறது. இதுவே ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தீபகற்ப இந்தியா ஆகிய இடங்களில் வாழும் மனிதர்கள் கருப்பாக இருப்பதற்கு காரணம். சூரிய ஓளி சாய்வாக விழும் நிலப்பரப்பான ஐரோப்பா, அமெரிக்கா, வடக்கு ஆசியாவில் வாழும் மனிதர்களுக்கு மெலனின் தேவை குறைவாக இருப்பதால், தோல் வெள்ளையாக இருக்கிறது.


ஆஸ்திரேலியாவில், பூர்வக்குடிகள் (Aborigine) கருப்பர்களே. வந்தேறிகளான வெள்ளையர்கள் அவர்களை அழித்து, மிச்ச சொச்சங்களை காட்டுக்குள் விரட்டி விட்டனர். கிரிக்கெட் வீரர் ஆன்ரூ சைமன்ஸும், 2000 ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியின் போது ஜோதியை ஏற்றி வைத்த தடகள வீராங்கனை காத்தி பிரிமன் ஆகியோர், இந்த இனத்தை சேர்ந்தவர்களே. அதேபோல் அமெரிக்காவில் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அழித்து, வெள்ளையர்கள் குடியேறினர். அங்குள்ள கருப்பர்கள் அனைவரும், பண்ணைகளில் பணி புரிவதற்காக கொத்தடிமைகளாக, ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வரப்பட்டனர் (இது தொடர்பாக சமீபத்தில் அலெக்ஸ் ஹேலி எழுதிய THE ROOTS என்னும் நூலின் தமிழாக்கத்தை படித்தேன். அனைவரும் படிக்க வேண்டிய நூல்).


இந்தியாவிற்கு கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் வெள்ளை தோலும், நீளமான மூக்குடையவர்களாகவும் இருந்தார்கள். பூர்வகுடிகளான திராவிடர்கள் கருப்பாக, சப்பை மூக்குடன் இருந்தனர். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களது கலாச்சாரத்தையும், மொழியையும் அழித்தாலே போதும். ஒரு இனத்தை ஆள வேண்டுமானால் அவர்களது கலாச்சாரத்தையும், மொழியையும் சிறுமைப்படுத்தினாலே போதும்.

இதுதான் இந்தியாவில் நடந்தது, ஆரியர்களின் சமஸ்கிருதம் தேவ பாஷை ஆனது, அவர்களது நிறமும், கலாச்சாரமும் உயர்வாக ஆனது. ஆரிய வழிதோன்றல்களான பார்ப்பனர்கள் அதை இன்னும் கட்டிக்காத்து வருகின்றனர் என்பதே என் கருத்து.


எந்த இடத்திற்கு போனாலும் வெள்ளை தோல் என்றால் தனி மரியாதைதான். எதாவது, துணிக்கடைக்கு போய், கருப்பா இருக்க நம்ம ஆளு, “சார் அந்த மேல இருக்க துணியை கொஞ்சம் எடுத்துக்காட்டுங்க” அப்பிடின்னா “சார் அதெல்லாம் காஸ்ட்லி”னு பதில் வருது. ஏன் கருப்பாக இருக்கிறவன் விலையுயர்ந்த துணி உடுத்தமாட்டனா? பள்ளிகூடத்தில் நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகள் அல்லது யாராவது முக்கிய பிரமுகர்களை வரவேற்க வேண்டும் என்றால் உடனே, வெள்ளைத் தோல் மாணவ/மாணவியருக்கே முதலிடம். எனக்கு கூட சின்ன வயசில ஸ்கூல் டிராமால நடிக்க ரொம்ப ஆசை. ஆனா, அதுக்கு எங்க ஸ்கூல் ரூல்சுப்படி, ஒன்னு சிகப்பா இருக்கணும், இல்ல அலங்காரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கறதுக்கு வசதி இருக்கணும். இந்த ரெண்டு க்வாலிப்பிக்கேசனும் எனக்கு கிடையாது, வெறும் ஆர்வம் மட்டும்தான். கடைசில என்னோடு நச்சரிப்பு தாங்க முடியாம, கொஞ்சம் வளத்தியா இருந்ததுனால, ஏசுவோட அப்பாவா, ஆடு மேய்க்கிற ஜோசப்பு வேசத்த குடுத்தாங்க. காஸ்டியுமா ஒரு கிழிஞ்ச கம்பளி கொண்டுவந்தா போதும்னாங்க, அதான் எங்க வீட்டுல நிறைய இருக்கே! பாவம் எங்க நாடக டீச்சர்க்கு தெரியல, ஜெருசேலேமில் ஆடு மேய்ச்ச ஜோசப்பு செவப்பதான் இருப்பார்னு. அதுதான் நான் முதலும், கடைசியுமாக நடிச்ச நாடகம்.

கருப்பாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை இன்னும் சிக்கலானது. பொண்ணு கருப்பாக இருக்கு, ஒரு பத்து பவன் கூட போடுங்கறான் மாப்பிள்ளை. செம்மறி ஆட்டுக்கு ஒரு காசு, வெள்ளாட்டு கறி ஒரு காசுன்ற மாதிரி, பெண்களை கூறுப்போட்டு விக்கிறான். “ஏய் கருவாச்சி” என்று கிண்டலடிக்கும் நம்மூர் மன்மதக்குஞ்சுகள் ஒரு பக்கம், சிவப்புதான் அழகுன்னு, ஊடகங்களும் திரும்ப, திரும்ப கூறிக்கொண்டே இருக்கின்றன, மறுபக்கம். விளம்பரங்களில், கருப்பாக இருப்பதால் மணமகனால் நிராகரிக்கப்படும் பெண், நேர்முக தேர்வில் தோல்வியடையும் பெண் அனைவரும் ஒரு களிம்பு வாங்கி பூசியவுடன், சிவப்பாக ஆகிறார்கள். அதனால் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது, வேலை கிடைக்கிறது. பெண்களுக்கு அறிவு முக்கியமில்லை, அவளுடைய உடலை வைத்துதான் பிழைக்க முடியும் என்கிற இந்த விளம்பரங்களை, பிலிம்களை தீயிட்டு கொளுத்தத்தான் வேண்டும். நம்முடைய பெண்கள் தீக்குச்சி அடுக்கியும், மில்களில் “சுமங்கலி திட்டம்” ன்ற பேர்ல கொத்தடிமைகளாகவும் வாங்குற கூலில பாதியை ஃபேர் & லவ்லி, ஃபேர் எவர் போன்ற சிவப்பழகு கிரீம்கள் தின்றுவிடுகின்றன.


இவர்களது உலக அழகிகள் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்கள், அழகின் இலக்கணங்களாக இவர்கள் சொல்லும் சிவப்பான நிறம், ஒடிசலான தேகம், ஒய்யார நடை என அனைத்தையும் கொண்டிருந்த போதும், அவர்கள் என்னை ஒரு போதும் கவர்ந்தது கிடையாது. ஏதோ பத்து நாள் காய்ச்சல் பட்டினியாக கிடந்த மாதிரிதான் எனக்கு தோன்றும். இதை விட, கள்ளமில்லாமல் சிரிக்கும், எங்க பக்கத்து வீட்டு பிள்ளையே அழகாக இருக்கிறாள்.


உடல் உழைப்பு செய்யாமல், கோயில் மந்திரம் சொல்லி ஊர ஏமாத்தற பார்பான் வீட்டுப்புள்ள வெள்ளைத்தோலோடு இருக்கலாம், காட்டிலும் மேட்டிலும், உழைக்கும், கல்லுடைக்கும் எங்க பொண்ணு கருப்பத்தான்யா இருக்கும். சமீபத்தில் வந்த சிவாஜி படத்தில், அங்கவை, சங்கவைன்னு தமிழ் பெயருடைய பெண்களை கருப்பு தோலாக காட்டி, ஒரு கருப்பான தமிழறிங்கரைக் கொண்டே கேவலப்படுத்தியிருப்பார்கள். இந்த கதை வசனத்தை எழுதிய “அறிவுஜீவி”, நம்ம வெலக்கமாத்து கொண்டை சுஜாதாவிற்கு இருப்பது பார்ப்பன கொழுப்பில்லாமல் வேறேன்ன? இந்த நாட்டிலுள்ள அத்தனை தார்ச்சாலைகளையும் போடுவதற்காக தலையில் துண்டால் வண்ட கட்டிக்கிட்டு, கொதிக்கிற வெயில்ல, அனல் அடிக்கற தாரையும், சரலை கல்லையும் சுமந்தது எங்க புள்ளதான். இங்க இருக்கிற அத்தனை வீட்டையும் கட்டுவதற்காக தலையில் துண்டால் வண்ட கட்டிக்கிட்டு, செங்கல் சுமந்தது எங்க புள்ளதான். மூட்டை மூட்டையாக உணவு தானியத்தை விளைவிக்க, தலையில் துண்டால் வண்ட கட்டிக்கிட்டு மாங்கு மாங்குனு கருதருத்ததும் எங்க புள்ளதான். அனைத்தையும் உருவாக்கும், வியர்வை வடியும் எங்கள் பெண்களின் கருத்த முகமே அழகு. உன் வெள்ளை தோல வைச்சு ஒரு மசிறும் புடுங்க முடியாது.


ஆம்பளை கருப்பாக இருக்கிறதுதான் அழகு, ஆனா பொம்பிளைனா சிகப்பாதான் இருக்கணும்ங்ற கருத்தை மிக ஆழமாக பதியவைத்தது, தமிழ் சினிமாதான். ரஜினிகாந்த், விஜயகாந்த், முரளி என்று இன்னைக்கிருக்கும் தனுஷ், விஷால் வரைக்கும், கருப்பான நடிகர்கள் வெற்றி பெற முடிந்த அளவுக்கு ஏன் கருப்பான நடிகைகள் வெற்றி பெற முடியவில்லை. பாலுமகேந்திராவால் அறிமுகபடுத்தபட்ட நடிகைகள், பெரும்பாலும் தமிழ் பெண்களாகவோ அல்லது தமிழ் பெண்களின் சாயலிலோ இருப்பார்கள் உ.ம். சோபா, அர்ச்சனா, மவுனிக்கா, ஈஸ்வரி ராவ். இவர்களை போன்று, பல திறமையான நடிகைகளின் நிறம் கருப்பு என்பதாலேயே, வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், இங்கு கதாநாயகர்கள் கருப்பாக இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் வில்லன்கள் (அவனோட வரும் அடி ஆட்கள்)கண்டிப்பாக கருப்பாகத்தான் இருக்க வேண்டும். இது போன்றே தீய செயல்கள் செய்பவர்களாக அல்லது தீய செயல்களோடு சம்பந்தப்பட்ட நிறமாகவே, கருப்பு எப்போதும் சித்தரிக்கப்படுகிறது. குஜராத்துல 2000 அப்பாவி மூஸ்லீம் மக்களை படுகொலை செய்த/செய்ய "மாஸ்டர் பிளான்" போட்ட நரேந்திர மோடி, மதக்கலவரத்தின் தந்தை அத்வானி,இவரகளோட பங்காளி பால் தாக்ரே"னு எனக்கு தெரிஞ்ச வில்லன்கள் எல்லாம் சும்மா செக்க செவிர்னு கொய்யா பழம் மாதிரிதான் இருக்கான்.


“முத்து” என்கிற படத்தில் “தில்லானா தில்லானா” என்ற ஒரு பாட்டுல, ரஜினி மீனாவை பார்த்து கேட்பாரு,”சிகப்பான ஆண்கள் இங்கு சில கோடியுண்டு, கருப்பான என்னை கண்டு கண்வைத்ததென்ன?”. கருப்பா இருக்கிறதுனால ரொம்ப தாழ்வு மனப்பான்மையோட பேசற நம்ம கதாநாயகர்களின் ஜோடி எப்பவும் சிவப்பத்தான் இருப்பார்கள். “கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”ன்னு ஒரு பொண்ணுதான் பாடுவாளே ஒழிய ஆம்பிளை என்னைக்கும் பாடமாட்டான். வைதேகி காத்திருந்தாள் படத்தில் கதாநாயகி, விஜயகாந்த் கருப்புனால, தானும் கருப்பா மாறுவதற்காக உச்சி வெயில் போய் நிப்பாங்க, ஏன்னா அவர் மனசு கோணிரக்கூடாதாம். ஆம்பிளை கருப்ப இருந்தா “கருப்பு வைரம்” ங்றான், பொம்பிளை கருப்புனா, “கருவாச்சி”ங்றான்.


மன்மதன் படத்தில், சைக்கோவாக வரும் மொட்டதலை சிம்பு, “காதல் கொண்டேன்”னில் வரும் டொக்கு விழுந்த தனுஷ் இவர்களையெல்லாம் பார்த்தா எனக்கு வாந்திதான் வருது, பிள்ளைகளுக்கு எப்பிடிடா காதல் வரும். இவனுகளுக்கு ஏன் செவத்த பிள்ளைக மேல மட்டும் காதல் வருது. இவன மாதிரி பொறுக்கியெல்லாம் படமெடுக்கிறதால் தான், நாகர்கோவிலில் கறிக்கடை வைச்சிருக்கும் ஒரு மிருகம், ஒம்பதாம் வகுப்பு படிக்கும் பிஞ்சு முகத்தில ஆசிட்ட உத்துறான், கேட்டா “காதல சொன்னேன் ஏத்துக்கல, அதான் ஆண்கள ஏமாத்ற பெண்களுக்கு பாடமா இருக்கட்டும்ன்னு செஞ்சேன்"னு, சிம்பு மாதிரி டயலாக்கு பேசுறான். இதுக்கு பேரு காதலா? வக்கிரம்.


காதல் யாருக்கு வேண்டுமானலும் வரலாம் சரிதான். ஆனா ஏன் எந்த சினிமா கதாநாயகர்களும், மில்லுல வேலைபாக்கற அல்லது பின்னலாடை நிறுவனத்தில் (அதாங்க கார்மென்ட் ஃபேக்டிரி) வேலைபாக்கற பிள்ளைகள லவ் பண்ண மாட்டேங்கறாங்க?


இப்பொழுது புரிகி்றதா? பெரியார் ஏன் கருப்பு சட்டை அணிந்தாரென்று! கருப்புதான் “எனக்கும்” பிடிச்ச கலரு!!